இகடோர் குல பேசுந்தெய்வம்
மாலையம்மன் அதிகாரம்..
சிந்துக் கரையின் முந்திய நாகரிகம்:
கொண்டு அமைந்தது இந்து ஆகமம்.
அனுப்பர் குலத்தின் ஆதார உதயம்:
கணிப்பார் பதித்த ஒன்னம்மா சரிதம்.
பாரதி பிறந்த ஊரது எட்டையபுரம்,
தூரம் கிழக்கில் நேரது நாகலாபுரம்;
நாடோடி போன்று ஓடோடி அனுப்பர்
தேடிய பட்டி கவுண்டன் பட்டி.
உகந்த பக்தி ஒன்னம்மா வம்சம்,
தவந்தன் சக்தி கம்பளர் அம்சம்;
ஆடுகள் மேய்ப்பது அனுப்பர் பிழைப்பு,
வீடுகள் காப்பது மகளீர் பொறுப்பு.
வேளான் என்பார் விவசாயி ஆவார்,
தாளாண்மை ஆர்வர் தன்னிக ராவர்.
மேலோர் என்பார் மனதாளும் வல்லார்:
கோளாமை வாழும் அனுப்பர் நல்லார்.
கவுண்டன் பட்டி கல்லூரணி ஊரார்,
உகந்த கெட்டி ஓர்ஊரார் போலர்.
இருஊர் நாட்டாமை வைரவக் கவுண்டர்
ஒரே தங்கை மச்சானுடன் வாழ்ந்தார்.
தங்கை இரட்டை பெண்கள் ஈன்று
சென்றாள் அண்ணன் கைகளில் ஈந்து.
வீச்சிட இரட்டைக் குழந்தைகள் ஏந்தி:
உச்சி முகர்ந்தார் தாய்மாமன் தாங்கி.
தங்கை பெற்ற தவப்புதல் வியர்கள்,
சின்னு பைய்யி வீரபையி இருவர்;
சக்தி பெற்ற ஒன்னம்மா பக்தியர்:
சித்தம் சுத்தம் மாமன் பற்றியர்.
மருமகள் உறவு பிணையாக ஆனார்,
பிறவி பறந்து கடனாக்கிப் போனாள்.
தாய்க்குறை தீர்க்க தன்மடி சுமந்தார்.
தாயான வைரவர் தாயாகி வளர்த்தார்.
கொடுமை உச்சம் அனாதைப் பிறவி.
பெருமை மிச்சம் தாய்மாமன் நிறைவு.
தாயாடு கரந்து தான்பால் கொடுத்து
சேயர் இவரில் தானிறை அடைந்தார்.
சின்னு பைய்யும் வீர பைய்யும்,
கண்கள் ஐய்யம் காணிடச் செய்யும்.
இருவர் ஒருவர் என்பதன் அதிசயம்,
மறுகும் கண்கள் மயக்கும் இரகசியம்.
அழகின் மொத்தம் துலங்கிடும் பதிப்பு.
வழங்கிடும் சிற்பம் விளங்கிடா வடிப்பு.
இரவின் நிறைவு ஆதவன் மலர்ச்சி.
பிறப்பின் புதிராம் இருவரின் வளர்ச்சி.
சேமம் மேலக் கல்லூரணிக் காடு.
மாமன் ஆடுகள் மேய்ய்த்திடும் பாடு.
வேளைகள் மதியம் மாமனைத் தேடி.
சோறு சுமப்பர் சோதரி கூடி.
வாலைக் கன்னியர் சோறு ஆக்கி,
மேலக் கல்லூரணிக் காடு நோக்கி,
மாமன் பாசம் ஆசையில் தேக்கி:
ஏகினர் விசாகம் நோன்பும் தாங்கி.
களையஞ் சுமந்திரு கன்னியர் செல்ல,!வளைந்த கதிர்கள் என்னமோ சொல்ல!
குருவிகள் பறந்து வழித்துணை பாடி
இரட்டை எழிலில் எவளெனத் தேடும்..
எரியும் சூரியனும் இரக்கம் பார்ப்பான்.
கருப்பு நேராமல் கருமேகம் பாய்வான்.
மருளும் மதியம் இரவென மயங்கும்:
விரையும் மதியும் வழியது தொடரும்.
காலைப் பூக்கள் மாலையை மறக்கும்.
மாலைப் பூக்கள் வேளை நினைக்கும்.
தென்றல் கொண்டல் பூவாரித் தூவும்;
கண்டால் ஊர்வசி மேனகை சோரும்.
விண்ணில் மின்னும் விசாக வெள்ளி,
மண்ணில் ஆடும் ஒயிலோ துள்ளி!
எண்ணம் பண்ணும் வண்ணங் கோடி:
இன்னும் சொல்ல எண்ணுமோ தேடி.
மாமனைக் காணும் மாலது தேடி,
சாமியே தோணும் சந்தோசம் கூடி;
கண்ணெட்டும் தூரம் கண்டனர் பாடி:
விண்ணடை வீரம் கொண்டனர் ஆடி.
சிரித்து விளையாடி நடத்திய பாதை,
மறித்துக் குலையாட வருத்திய வாதை;
விரித்த படங்காட்டி விடமுடன் நாகம்:
முறுக்கி நிலையது குலைந்தனர் தேகம்.
மாலனை அழைத்த பாஞ்சாலி போன்று,
மாமனைக் கூவினர் அவலையர் இன்று.
செவிகள் உணர்த்தும் அபாயம் எதுவோ!
தவிக்குந் தாயின் அவசரம் இதுவோ!
பதறித் துடித்து அலறி ஓடி,
கதறும் செவிவழி காடுகள் தேடி;
கண்டான் அவலம் கண்மாய் கரையில்:
நின்றான் வடித்த கண்ணீர் திரையில்.
தலைக்கும் மேலே படமெடுத் தாட,
அறுத்தான் அரவம் தலையது ஓட;
சிதைத்தான் பாம்பை துண்டங் களாக:
விடுத்தான் இருவரை தனித்தனி ஆக.
சர்பத்தின் தலையோ தரையை சீண்ட,
கர்வத்தில் பறந்தது மாமனைக் தீண்ட;
சோகம் நிறைந்தது சுந்தர வதனம்:
தேகம் குளிர்ந்து சொன்னது பயணம்.
ஆவி பிரிகிற வேளை நெருக்கம்,
கேவி உரைக்க நாவது சுருக்கும்.
பாவி நானோ பறந்திடு வேனோ!
கோவிப் பாளேஉம் தாயென பறந்தார்.
மருமக்கள் இருவர் மாமன் மார்பில்
பொருந்தக் கதறி புரண்டனர் சோர்வில்.
இறைவன் கட்டளை இதுவே ஆனால்:
எமக்கினி உற்றதும் அதுவே என்றார்.
தாயன்பின் பிறகு தாய்மாமன் துணை,
தாய்மாமன் பிறகு யாரிங்கு இணை?
அனாதை அவலம் எவர்க்கும் பாவம்:
இனமான கற்பின் இவரானார் தீபம்.
வாழ்வினி வாழ ஊரென்ன சொல்லும்!
வாழ்வே போயின் யாரென்ன செய்யும்!
காணுந் திசைகள் கண்ணீர் சொறிந்து
வானம் துடிக்க கானகம் அழுதது
மாமனை ஏந்தினள் சின்னு பைய்யி,
மடிமீது புரண்டனள் வீர பைய்யி.
தீயுண்ட வன்னிமரம் தாயெனப் பற்ற
மேயும் ஆடுகள் தாவின உடன்தீ.
"அரவம் தீண்டிய சாபம் என்ன?
அறிவும் தாண்டிய பாவம் என்ன?
பெற்றுப் போனாள் அனாதை யானோம்
உற்றார் போனால் நாமென் னாவோம"
மருமக்கள் ஒப்பாரி வானம் பிளக்க,
மறுமுனை செவ்வேறி தானும் முழக்க;
ஆகாயம் தீவாரி காடுகள் எரிந்தன:
மேகாயம் பூவார வானேகிப் பறந்தனர்.
வானவர் சூழ வாழ்த்தொலி பாட,
மாணவர் ஏற்று மாலைகள் சூட;
மாலை யம்மன் எனும்பேர் ஆட:
மேலக் கல்லூரணி அமர்ந்தனர் வீடு.
இகடோர் வழியின் மூத்த மகளே!
இகமும் பரமும் உன்னிறைப் புகழே!
அனுப்பரின் காவல் புலமுன் கோவில்!
துணையுன் ஏவல் தெய்வம்நீ நேரில்.
ஒன்னம்மா ஆக்கிய அக்கினிக் குஞ்சு,
பின்னும் மேலக் கல்லூரணி எஞ்சி;
வீரிய நெருப்பு மேவிய தீர்ப்பு:
வீர பைகளின் கற்பதன் ஏற்பு.
சோம வாரம் ஆராதனை நேரம்,
ஏமம் விசாகம் குருபூசை நாளாம்;
வசத்தின் நம்பிக்கை அசத்தும் ஆசை:
நிசத்தின் தெய்வம் நித்திய பூசை:
நேரில் ஆளோடு பேசுந் தெய்வம்.
நேருந் துன்பங்கள் தீர்க்குந் தெய்வம்.
கம்மங் காடுகள் காக்குந் தெய்வம்.
கைவளை வாங்கி கோர்குந் தெய்வம்.
கொ.பெ.பி.அய்யா.
.
No comments:
Post a Comment