Saturday, 15 November 2025

ஓன்னம்மாள் பூக்கூடைச் சிந்து

பூக்கூடைச் சிந்து

கொல்லம் பரும்பு நகர் வாசன்---தமிழ்
மேவும் பிச்சையா தாசன்--வாழுங்
குலமெச்சிய தேனிற்கவி அதனைப் பாட
அதனைப் பாட வழியிற் கூட
கவியில் புனை தீரன்
உன் படை மாறன்

அட்டி தொட்டய்யன் மனைவி--குல
அனுப்பர் வணங்குந் தேவி---சேம
வரமே தரு கொல்லாபுரி இலந்தைக் கோட்டை
குலம் வாழத் துணை நீயே
வலம் வந்தோம் உந்தன் குடியே.

சின்னஞ் சிறுமிகள் உன்னை --வரம்
வேண்டிச் சுமந்தனர் கூடை--அனுப்பர்
சுகமே தரு நலமே அருள் அம்மா
வரமே பெற குலமே நலம்
உறவே நீ யெனத் தொழுதோம்
பூக் கூடை சுமந்தோம் அம்மா.

கல்லும் முள்ளும் காட்டுப் பாதை--உன்னை
எண்ண முள்ளும் விலகும்.
அரவம் அஞ்சி முன்னே வணங்கும்
நிலவும் வழியாய் ஒளிரும்
உலவும் மக்கள் நிலவும் 
துணையாகும்.

கம்மாக் கரையில் அம்மா--அவள்
நம்மாள் வணங்கும் தெவ்வு.--மற்றோர்
சும்மா சோதனை அஞ்சும்
குலமே நலமே கும்பிடப் பலமே
அனுப்பர் வாழ்வே அவளே
அரியின் தேவி ஒன்னு.

பௌர்ணமி நாளே சுகமே--அவள்
அவதார ஒன்னு அகமே--அவள்
அரியின் திருமதி தேவி
உறுமிச் சத்தம் சிறக்கும் சித்தம்
சிறுமியர் சுமையவள் பொறுப்பு
அறிவாளவளே அனுப்பர் விருப்பு.

எத்தனை தூரம் கடந்தோம்--இன்னும்
மொத்த பாரமும் சுமந்தோம்--அனுப்பர்
சுமையைப் பெற்று அருள்வாள்
கனமே தாங்கும் குணமே ஒன்னு
மனமே ஏங்கும் நமக்காய் தேவி
தனமே தந்தும் காப்பாள் தாயி

அரிதான் அய்யன் தொட்டன்--அவர்
துணைதான் தாயார் ஒன்னு--அனுப்பர்
குலமே காக்க நலமே அருள
இனமாய் அனுப்பராய் பிறந்தர்.
ஆவுகள் மேய்த்த அட்டி தொட்டன்
காவலனாக குடிகள் ஆண்டார். 

இழுக்கிலா குலத்தின் விழுமம்---அறியா
துலுக்க ரரசன் தொடுவனோ--எம்
குலப் பெண்ணையும் அடைவனோ
அம்மா தாசன் அடியான் மீட்டான்
எம்குலப் பெருமை ஏந்திக் காத்தான்
எக்கிளைப் பெண்ணும் 
மணக்க லுற்றான்

உனது கோவிலை அடைந்தோம் -அங்கு
பூக்கூடை இறக்கியும் வைத்தோம்-பால்
பொங்கலும் பொங்கப் புதுப்பானை
புதுநெல்லும் பொங்கிப் பொங்கும்
நோக்குடை அனுப்பருன் வாக்கும் கேக்க
வாக்குடை ஒன்னுன் வாசலில் காக்க.

தாயாரம்மா ஒன்னுன் சேயோர் -ஆயோர் 
குலம் காப்பாள் அவளே  காப்பு.--வாசப்
பூக்கூடை இறக்க வாக்களித்தாள்--அனுப்பர்
ஓன்று கூடி  வணங்க வாக்குக்காகச் சுணங்க
எல்லை நின்று பார்ப்ப்பாள் 
தொல்லை நீக்கிக் காப்பாள்.

கவிஞர். கொ.. பெ. பிச்சையா.




























Friday, 14 November 2025

அப்பா உன் தியாகத்தை

அப்பா நீ தெய்வமாகிட்ட.

அப்பா அப்பா உன் பாசத்த மிஞ்ச யாருமே இல்ல.
தப்பாப் புரிஞ்ச உன்னோட தியாகம் சிறுசே இல்ல.
புரிஞ்சு தெரிஞ்சி அறிஞ்சு நானும் அழுகிற போது,
அப்பா நீயோ ஆளே இல்ல தெய்வ மாகிட்டே.

விரலப் புடிச்சி நடக்க வச்சி நாட்டு நடப்பக் காட்டினே
உறவைக் காட்டி உலகைக் காட்டி
உன்னைக் காட்டினே!
பள்ளிக் கூடம் வழியக் காட்டி
படிப்பக் காட்டினே.‌
அள்ளி அள்ளி‌ முத்தமிட்டு
அறிவை ஊட்டினே!

உன்னவிட தெய்வம் வேறு உலகிலே இல்ல.
உன்னப் பட்டினி‌ போட்டு நீ
என்ன வளத்துட்டே.
உழைச்சு உழைச்சு எனகக்காக ஓடாத் தேஞ்ச நீ!
கண்ணெதிரே கண்ட உண்மைக் கடவுளே நீ.

ஊரெல்லாம் என்னப் பத்தி உசத்திப் பேசுவ-
வீடு வந்தா என்னத் தேடி விசாரணை செய்வ!
என்ன நீ சாமியின்னு இருமாப்
பாவே!
சின்னப் போட்டோ  சாமி ஆன அப்பா நீ இப்போ!

நடக்க விட்டுப் பின்னால நடய ரசிப்ப!
கடை வரைக்கும் வந்து நீ கண்டு சிரிப்ப!
அம்மாவுக்கும் தெரியாம வாங்கிக் குடுப்ப!
சும்மா சும்மா அம்மா முன்னே
கண்டிச்சுத் தோப்ப!

சிரிக்கச் சிரிக்கக் கதைகள் சொல்லி சிந்தை வளர்ப்ப!
குறுக்க ஒரு விளக்கம் பேசி
அறிவைக் கொடுப்ப!
மறுத்துக் கேட்டா மறுபடியும்
அருத்தம் படிப்ப!
பறக்க விட்டுப் பழக வச்ச பெருமை அடைவ!

இருக்கும் போது உன்னப் பத்தி
அருமை தெரியல.
வெறுப்பதுபோல் நடிச்சதுக்கும்
விளக்கம் புரியல.
விளக்காகி வெளிச்சம் தந்து
விளங்க வச்சிட்ட!
உலகம் இதை விளங்கி வாழ
தெய்வம் ஆகிட்ட!

கொ.பெ.பிச்சையா.