Sunday, 12 January 2025

அப்பா உன் தியாகத்தை

அப்பா நீ தெய்வமாகிட்ட.

அப்பா அப்பா உன் பாசத்த மிஞ்ச யாருமே இல்ல.
தப்பாப் புரிஞ்ச உன்னோட தியாகம் சிறுசே இல்ல.
புரிஞ்சு தெரிஞ்சி அறிஞ்சு நானும் அழுகிற போது,
அப்பா உன்னை வணங்கப் பாவி இழந்திட்டேனே.

விரலப் புடிச்சி நடக்க வச்சி வலிமை ஆக்கினே!
உறவைக் காட்டி உலகக் காட்டி
உன்னைக் காட்டினே!
பள்ளிக் கூடம் வழியக் காட்டி
படிப்பக் காட்டினே.‌
அள்ளி அள்ளி‌ முத்தமிட்டு
அறிவை ஊட்டினே!

உன்னவிட தெய்வம் வேறு உலகிலே இல்ல.
உன்னப் பட்டினி‌ போட்டு நீ
என்ன வளத்துட்டே.
உழைச்சு உழைச்சு எனகக்காக ஓடாத் தேஞ்ச நீ!
கண்ணெதிரே கண்ட உண்மைக் கடவுளே நீ.

ஊரெல்லாம் என்னப் பத்தி உசத்திப் பேசுவ-
வீடு வந்தா என்னத் தேடி விசாரணை செய்வ!
என்ன நீ சாமியின்னு இருமாப்
பாவே!
சின்னப் போட்டோ  சாமி ஆன அப்பா நீ இப்போ!

நடக்க விட்டுப் பின்னால நடய ரசிப்ப!
கடை வரைக்கும் வந்து நீ கண்டு சிரிப்ப!
அம்மாவுக்கும் தெரியாம வாங்கிக் குடுப்ப!
சும்மா சும்மா அம்மா முன்னே
கண்டிச்சுத் தோப்ப!

சிரிக்கச் சிரிக்கக் கதைகள் சொல்லி சிந்தை வளர்ப்ப!
குறுக்க ஒரு விளக்கம் பேசி
அறிவைக் கொடுப்ப!
மறுத்துக் கேட்டா மறுபடியும்
அருத்தம் படிப்ப!
பறக்க விட்டுப் பழக வச்ச பெருமை அடைவ!

இருக்கும் போது உன்னப் பத்தி
அருமை தெரியல.
வெறுப்பதுபோல் நடிச்சதுக்கும்
விளக்கம் புரியல.
விளக்காகி வெளிச்சம் தந்து
விளங்க வச்சிட்ட!
உலகம் இதை விளங்கி வாழ
தெய்வம் ஆகிட்ட!

கொ.பெ.பிச்சையா.














Saturday, 11 January 2025

ஒன்னம்மாள் மந்திரம்.108வரிகள்.

ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்
.(நூற்று எட்டு வரிகள்)

1)இமயம் பிளந்து எழுதீ பிறந்தாய்
உமையாள் மகளே ஒன்னம்மாள்.
அமையும் உலகின் அனுப்பர் முதல்வி
இமையாய்க் காவல் ஒன்னம்மாள்.

2)கங்கை யமுனை கரைகள் ஆண்டு
தங்கம் அறிந்த ஒன்னம்மாள்.
துங்கம் பரவி எங்கும் உலவும்
சிங்கத் தலைவி ஒன்னம்மாள்.

3)வீரம் விதைத்து தீரம் வளர்த்து
விந்தியம் தாண்டிய ஒன்னம்மாள்
ஆரம் படைத்து அனுப்பனை மணந்து
ஆட்சி அமைத்தாய் ஒன்னம்மாள்.

4)அட்டிய தொட்டன் அய்யன் மனையாள்
அம்மா அரசியே ஒன்னம்மாள்.
பற்றிய பலுத்தன் பகையினை வென்று
பாவையை மீட்டாய் ஒன்னம்மாள்.

5)சோளியோர் வம்சம் சுடர்கொடி ஆண்டாள்
மாலவி அம்சம் ஒன்னம்மாள்.
ஆயர்பாடி அனுப்பரின் கூட்டம்
தாயார் நீயே ஒன்னம்மாள்.

6)முள்ளால் கோட்டை பெல்லார் நாட்டை
சொல்லால் ஏற்றிய ஒன்னம்மாள்.
வல்லான் காட்டிய நல்லார் பாட்டை
கொள்ளோர் போற்றிய ஒன்னம்மாள்.

7)கன்னடம் கடந்தும் பன்நிலம் பரந்தும்
தென்நிலம் உறைந்தாய் ஒன்னம்மாள் .
கொண்டிடம் தமிழும் மன்றிடம் நிறைந்தும்
நின்றிடம் நிலைத்தாய் ஒன்னம்மாள்.

8)பகவான் அருளும் இகம்பெற பொருளும்
தகவாய் பெருக்கிய ஒன்னம்மாள்.
அகமும் புறமும் அன்பே உருக்கும்
மகிமைத் திறமும் ஒன்னம்மாள்.

9)செந்நிறக் குருதி தண்ணீராய் ஓடிய
பெண்ணாறு கண்டாய் ஒன்னம்மாள்.
தன்னறம் கொண்டும் பொன்கரம் மொண்டும்
உண்ணிறம் தந்தாய் ஒன்னம்மாள்.

10)வியந்தான் மன்னன் விசயபுரத்தான்
நயந்தான் சொல்லில் ஒன்னம்மாள்.
உயர்ந்தான் தோளன் தொட்டன் அவர்க்கு
முயன்றாய் ஆட்சி ஒன்னம்மாள்.

11)ஆநிரை மேய்த்து அட்டிகள் பெருக்கினர்
தானிறை அனுப்பர் ஒன்னம்மாள்.
வானிறை வையம் வல்லமை முறுக்கவும்
மேநிறை கொடுத்தாய் ஒன்னம்மாள்.

12)அடையா மழையால் அணைகள் உடைய
படையாய் அடைத்தாய் ஒன்னம்மாள்.
கொடையாய் நாட்டைக் கொடுத்தான் மன்னன்
விடையாய் விபூதி ஒன்னம்மாள்.

13)நாடெங்கும் நல்ல மழையும் பெய்ய
நல்வரவு கொள்ள ஒன்னம்மாள்.
காடெங்கும் கானம் அலையும் செய்ய
வீடெங்கும் வாழ்வே ஒன்னம்மாள்.

14)நல்லார் நன்மை பேரும் பெற்றாய்
பொல்லார் புகைய ஒன்னம்மாள்.
கொள்ளார் உண்மை கொற்றம் முன்னே
தில்லார் நிறுவினை  ஒன்னம்மாள்.

15)அதிகாரம் பெற்றார் அனுப்பர் எல்லாம்
கதியாவும் தந்தாய் ஒன்னம்மாள்.
சதிமோசம் செய்தான் சண்டாளன் மல்லன்
விதிதோசம் ஏற்றாய் ஒன்னம்மாள்;

16)சத்திய வழியில் லட்சியப் பணியில்
நித்தியம் வாழ்ந்தாய் ஒன்னம்மாள்
உத்தம நெறியில் நிச்சயத் துணிவில்
பற்றினை நெருப்பை ஒன்னம்மாள்.

17)வேல மரங்கள் நாலா புறங்கள்
வீழவும் முழங்கினை ஒன்னம்மாள்.
சூழத் தீயதில் ஞாலம் அதிரவே
சூளுரை செய்தாய் ஒன்னம்மாள்.

18)மேகம் கூடி சோகம் முழங்க
வேகம் சிவந்தாய் ஒன்னம்மாள்.
யாகம் இதுதான் பாகம் வழங்க
தேகம் துணிந்தாய் ஒன்னம்மாள்.

19)வானவர் பதைக்க ஏனென விளக்க
கோனவன் துடிக்க ஒன்னம்மாள்.
மானம் பெரிதென வாழ்பவர் அனுப்பர்
வீணிலை சபதம் ஒன்னம்மாள்.

20)சத்தியம் காக்கும் உத்தமர் அனுப்பர்
நிச்சயம் செய்தாய் ஒன்னம்மாள்.
குற்றங்கள் செய்யா குலமென்று அனுப்பர்
பெற்றினைத் தந்தாய் ஒன்னம்மாள்.

21) புதல்வன் பொட்டியன் பொறுப்பினை பெற்றதும்
முதல்வன் அட்டியனுடன் ஒன்னம்மாள்.
தகதக நெருப்பின் தங்கக் குதிரையில்
சுகமாய் அமர்ந்தாய் ஒன்னம்மாள்.

22)அக்கினிக் கருவில் அவதாரம் ஆகினை
அக்கினிப் பிறவி ஒன்னம்மாள்.
இக்குலம் அனுப்பர் நற்குலம் ஆக்கினை
மற்பலம் உரக்க ஒன்னம்மாள்.

23)உறுமி முழக்கம் பெருகி முழக்க
புரவி பறக்க ஒன்னம்மாள் .
வானம் தொடவும் வளரும் நெருப்பில்
வலம்வரும் தாயே ஒன்னம்மாள்.

24)வானோர் பூமழை வாரியும் இறைக்க
தானுடல் தவிர்த்த ஒன்னம்மாள்.
மாயோன் அவனே மன்னவன் தொட்டன்
நாயகி பறந்தாய் ஒன்னம்மாள்.

25)தொட்டன் இராயன் பட்டம் விளங்க
பெற்றனை ஆணை ஒன்னம்மாள்.
அனுப்பர் என்றால் அடையாளம் உறுமி
தனிப்புகழ் அருளினை ஒன்னம்மாள்.

26)கிளைகள் வகுத்து தழைகள் தொகுத்து
உறவுகள் இணைத்தாய் ஒன்னம்மாள்.
வரங்கள் வழங்கி வாக்கும் விளங்க
அறங்கள் அருளினை ஒன்னம்மாள்.

27)பரந்து வாழ்ந்தும் மரபு நிறைந்தும்
அறியும் தெய்வம் ஒன்னம்மாள்.
அனுப்பர் குலத்தின் ஆதாரம் அறிந்தும்
இணைக்கும் பலமே ஒன்னம்மாள்.
----------'----'''''''-------------'--''''"''"''''----------------
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம் (பாகம் இரண்டு)

ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!
ஆதி முதலாய் நீதி செய்த
அம்மா அனுப்பாள் ஒன்னம்மாள்.
மேதினில் ஆதியாய் வேதியம் கண்ட
மேலான குலத்தாள் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

வாழும் ஒழுக்கம் ஆளும் வழக்கம்
ஞாலம் பழக்கிய ஒன்னம்மாள்.
குடும்பம் கூட்டம் ஊரும் நாடும்
குலமுறை அமைத்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

சத்திய வாக்கு உத்தமம் ஆக்கும்
பத்தினித் தெய்வம் ஒன்னம்மாள்.
தொட்டது துலக்கும் இட்டது விளங்கும்
உத்தமித் தாயே ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

அனுப்பர் என்றால் அறவோர் என்பார்
மனுகுலம் கண்டாய் ஒன்னம்மாள்.
அறம்பாடி என்பார் ஆக்கினை பெற்றார்
திறம்தேடி தந்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
அனுப்பர் வாழும் அவனி எங்கும்
அமைதி நிலைக்க ஒன்னம்மாள்.
வளமும் வளர்ச்சியும் வல்லமை பயிற்சியும்
நலமும் எல்லாம் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.

கொ.பெ.பி.அய்யா.

மந்திரமாய் இசைத்துப் பாட குல ஒற்றுமை
நன்மை உண்டாகும்..

கருத்து வரவேற்கப்படுகிறது.

Wednesday, 8 January 2025

ஒன்னு தொட்டய்யன் வாழ்த்து.

ஒன்னு தொட்டய்யன்.

ஒன்னு தொட்டய்யன் வாழ்த்து.


அம்மா ஒன்னுத் தாயம்மா!

அய்யா தொட்டன் துணையம்மா!

உழைக்கும் குலத்தின் தேவியே!

பிழைக்கும் வழியும் செய்யுமே!


ஆயர் பாடித் தெய்வமே!

அழைத்துத் துதியும் செய்வோமே!

ஆவாய் எம்மைக் காத்துமே!

அருள வேண்டும் தீர்க்கமே!


கொல்லம் பரும்பு தேவியே! 

கோவில் கொண்ட தேவதையே!

கம்மாக் கரையதன் மேலேயே!

காட்சி தருகின்ற தீமகளே!


இலந்தை முள்ளுக் கோட்டையே!

எழுப்பக் கேட்ட காவிரியே!,

வளரும் தமிழிந்த நாட்டையே

வாழ்விப்பாய் அம்மா வாழ்கவே!.


புல்லாங் குழலையும் ஊதுவாய்!

புதுப்புனல் நீயும் ஆக்குவாய்!

குடகு மலையின் கொடைமகளே

நடை பயின்றுவா காவிரியே!


நெருப்பில் பிறந்த தேவியே!

நீதி காக்குங் கோவியே!

வாடும் பயிரும் விளையவே

ஓடி வருவாய் காவிரியே!


உறுமிமேளம் தாளம் கொட்டி,

உனதுபுகழே கானங் கட்டி

உருக நாளும் கெஞ்சுகிறோம்.

வருக அருள்க ஒன்னம்மா!


பாட்டாளி குலமிங்கு என்னாளும்

பசிவலி  மறந்து வாழனும்.

கூட்டாக் கூடி ஒற்றுமையாய்

குலம்எம்மை தழைக்க வைத்திடுவாய்!.


அனுப்பர் எல்லாம் கூடுவோம்.

அம்மா அவளைப் பாடுவோம்.

அன்னை நீயே காவிரியே

அனுப்பர் குலத்தின் காவலே.


கொ.பெ.பி.அய்யா.